செவ்வாய், ஜூலை 15
என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும். —யோவா. 21:16.
“கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு மற்ற மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். (1 பே. 5:1-4) ஒரு மூப்பராக, சகோதர சகோதரிகள்மேல் உங்களுக்கு அன்பு இருக்கும். அவர்களை நன்றாக மேய்க்க வேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனாலும் சில நேரங்களில் நீங்கள் பிஸியாக, களைப்பாக இருப்பதால் இந்த நியமிப்பை உங்களால் முழுமையாக செய்ய முடியாமல் போகலாம். நீங்கள் செய்ய நினைத்தும் அதை செய்ய முடியாமல் போகும்போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். பேதுரு இப்படி எழுதினார்: “ஒருவன் சேவை செய்தால், கடவுள் கொடுக்கிற பலத்தில் சார்ந்திருந்து சேவை செய்ய வேண்டும்.” (1 பே. 4:11) சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. ஒருவேளை அதெல்லாம் இந்த உலகத்தில் முழுமையாக தீராத பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். யாராலும் செய்ய முடியாத உதவியை “முதன்மை மேய்ப்பர்” இயேசு கிறிஸ்துவால், அவர்களுக்கு செய்ய முடியும். அதை அவர் இன்றும் செய்வார், பூஞ்சோலை பூமியிலும் செய்வார். மூப்பர்களே, யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பது இதுதான்: சகோதர சகோதரிகளிடம் அன்பாக இருங்கள், அவர்களை பாசமாக கவனித்துக்கொள்ளுங்கள், “மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.” w23.09 29-30 ¶13-14
புதன், ஜூலை 16
ஞானிகளுடைய யோசனைகள் வீண் என்பது யெகோவாவுக்கு தெரியும்.—1 கொ. 3:20.
மனித யோசனைகளுக்கு இசைவாக நடப்பதை நாம் தவிர்க்க வேண்டும். இன்று நிறைய மக்கள் யெகோவாவின் சட்டங்களை மதிப்பதில்லை. நாமும் அவர்களைப் போலவே யோசிக்க ஆரம்பித்தோம் என்றால், யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் ஒதுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவோம். (1 கொ. 3:19) “இந்த உலகத்தின் ஞானம்” கெட்ட ஆசைகளுக்குத் தீனி போட்டு மக்களை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வைக்கிறது. பெர்கமுவிலும் தியத்தீராவிலும் இருந்த நிறைய மக்கள் ரொம்ப ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தார்கள், சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சில கிறிஸ்தவர்கள் அவர்களைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பொறுத்துக்கொண்டதால், இந்த இரண்டு ஊர்களில் இருந்த சபைகளுக்கும் இயேசு கடுமையான ஆலோசனை கொடுத்தார். (வெளி. 2:14, 20) இன்றும் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தங்களுடைய தவறான கருத்துகளை நம்மேல் திணிக்கப் பார்க்கலாம். நம் குடும்பத்தில் இருக்கிறவர்களும் நம்மோடு பழகுகிறவர்களும் நம்முடைய மனதை மாற்றப் பார்க்கலாம். நாம் இவ்வளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை என்று சொல்லி யெகோவாவுடைய சட்டங்களை மீறத் தூண்டலாம். உதாரணத்துக்கு, ஒழுக்கம் சம்பந்தமாக பைபிள் சொல்வதெல்லாம் நம் காலத்துக்கு ஒத்துவராது, அப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்லலாம். சில சமயங்களில், யெகோவா கொடுக்கிற வழிநடத்துதல் அவ்வளவு தெளிவாக இல்லை என்று நாம் காரணம் சொல்லலாம். “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சி” போவதற்குக்கூட நமக்குத் தோன்றலாம்.—1 கொ. 4:6. w23.07 16 ¶10-11
வியாழன், ஜூலை 17
உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.—நீதி. 17:17.
இயேசுவின் அம்மா மரியாளுக்குக் கண்டிப்பாகப் பலம் தேவைப்பட்டிருக்கும். அப்போது அவருக்குக் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், அவர் கர்ப்பமாவார் என்று தேவதூதர் சொன்னார். பிள்ளைகளை வளர்ப்பதில் அனுபவமே இல்லாத ஒரு பெண், மேசியாவாக ஆகப்போகிற குழந்தையை வளர்க்க வேண்டியிருந்தது. அதோடு, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கல்யாணம் செய்துகொள்ளப்போகும் யோசேப்பிடம் சொல்ல வேண்டியிருந்தது. இதெல்லாம் அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! (லூக். 1:26-33) மரியாளுக்கு எப்படிப் பலம் கிடைத்தது? அவர் மற்றவர்களுடைய உதவியை எடுத்துக்கொண்டார். உதாரணத்துக்கு, இந்த நியமிப்பைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லச் சொல்லி காபிரியேலிடம் கேட்டார். (லூக். 1:34) அதுமட்டுமல்ல, சீக்கிரத்திலேயே தன்னுடைய சொந்தக்கார பெண் எலிசபெத்தைப் பார்ப்பதற்காக ‘மலைப்பகுதியில் இருந்த யூதாவுக்கு’ போனார். எலிசபெத் மரியாளைப் பாராட்டினார். மரியாளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்ல எலிசபெத்தை யெகோவா தூண்டினார். (லூக். 1:39-45) அதைக் கேட்டபோது மரியாளுக்கு ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும். ஏனென்றால், யெகோவா “தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார்” என்று மரியாள் சொன்னார். (லூக். 1:46-51) காபிரியேலையும் எலிசபெத்தையும் பயன்படுத்தி யெகோவா மரியாளுக்குப் பலம் தந்தார். w23.10 14-15 ¶10-12